சமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன!

0
114

இந்தியாவிலேயே பறவைகளுக்கு என்று தனி சரணாலயம் இருக்கிறது என்றால் அது வேடந்தாங்கல் சரணாலயம் தான். 1936ஆம் ஆண்டு பறவைகளுக்கான தனி சரணாலயமாக இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரணாலயம் ஆனது ஐந்து கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. வேடந்தாங்கல் ஏரியின் நடுவில் பறவைகள் அமர்வதற்கு மரங்களும், ஏரிக்குள் பறவைகளுக்கு விருப்பமான நண்டு, நத்தை போன்றவையும் இருக்கிறது. 

இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பறவைகள் வருவது வழக்கமாக உள்ளது. கனடா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மியான்மார் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பறவை இனங்கள் இங்கு வந்து செல்லும்.

அதாவது, சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இந்த வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் சீசனுக்கு சீசன் வருமாம். அதில் 140 வகையான பறவை இனங்கள் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் இந்த வருடம் வேடந்தாங்கல் ஏரிக்கு சரியான நீர்வரத்து இல்லாத காரணத்தினால் ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வருகை தரும் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றத்துடன், உடனடியாக வேறு நீர் நிலையைத் தேடி  அங்கிருந்து திரும்பி செல்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் ஆதாரம் அளிக்கக்கூடிய மதுராந்தகம் ஏரியும், வளையபுத்தூர் ஏரியும் தற்போது நிரம்பி உள்ளது. ஆனால் வேடந்தாங்கல் ஏரிக்கு உபரி நீர் வரும் கால்வாயை சமூகவிரோதிகள் மணல் மூட்டைகளை கொண்டும், பாறைக் கற்களை கொண்டும் வழிமறித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதுமட்டுமின்றி வேடந்தாங்கல் ஏரியின் 5 கிலோமீட்டர் சுற்றளவை 3 கிலோ மீட்டராக சுருக்க ஏற்கனவே சதி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் இது போன்று வேறு ஏதும் திட்டம் தீட்டப்பட்டிருக்குமோ? என்ற சந்தேகம் அங்கிருக்கும் சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்டத்தின் உரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “கால்வாய் அடைக்கப்பட்டதாக தங்களுக்கு தகவல் ஏதும் கிடைக்கப்படவில்லை என்றும் அவ்வாறு அடைக்கப்பட்டிருந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு தேவையான நீர் செல்வதற்கு வழிசெய்யும்” என்று தெரிவித்துள்ளனர்.

Previous articleபாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்
Next articleமுக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!