விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! பொங்கல் டோக்கன் விநியோகத் தேதி மாற்றம்!

Photo of author

By Amutha

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! பொங்கல் டோக்கன் விநியோகத் தேதி மாற்றம்!

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசால் மக்களுக்கு பொங்கல் பரிசு அரிசி வெல்லம் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கமும் வழங்கப்படும். சென்ற ஆண்டு திமுக ஆட்சியை ஏற்ற போது பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும் என்று முதல்வர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவளித்தனர். இதனை அடுத்து முதல்வர் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி ,ஒரு கிலோ வெல்லம் ,ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஒரு முழு கரும்பும் சேர்த்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் நேற்று அறிவித்தார்.

இதற்கு இடையில் ஏற்கனவே பொங்கல் பரிசு வழங்கும் தேதியை ஜனவரி 2-ஆம், தேதிக்கு பதிலாக ஜனவரி 9-ஆம் தேதி, வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பொங்கல் டோக்கன் வழங்கும் தேதி வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜனவரி 4 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மாற்றி ஜனவரி 3 முதல் ஜனவரி 8 வரை வழங்குவதற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கரும்பு வழங்குவது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் கூறுகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகப்புடன் கரும்பும் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கரும்பு கொள்முதல் பணியை மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு கூட்டுறவு, வேளாண்மை, உணவுத்துறை ஆகிய மூன்று துறைகளும் மேற்கொள்ள உள்ளன. பொங்கல் பரிசு தொகப்பினை முதல்வர் தொடங்கி வைக்கும் ஜனவரி 9 அன்று ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் நடைபெறும்.

இந்தப் பொங்கல் பரிசு தொகுப்பின் மூலம் அரசுக்கு கூடுதலாக சுமார் 71 கோடி செலவு ஏற்படும். தமிழகத்தில் 5 ஆயிரத்து 600 ஏக்கர் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் 20 சதவீதம் அரசு கொள்முதல் செய்யும். எஞ்சிய கரும்புகள் சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளன. மேலும் விவசாயிகளிடம் கரும்பின் விலையை நிர்ணயம் செய்ய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.