தோண்ட தோண்ட பிணங்கள் 8,000 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை! 

0
247

தோண்ட தோண்ட பிணங்கள் 8,000 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை! 

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 7900 ஆக உயர்ந்துள்ளது. எங்கு தோன்றினாலும் பிணங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.

துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி இடிந்து தரைமட்டமாயின. இரு நாடுகளின் எல்லைகளும் பயங்கர அழிவை சந்தித்துள்ளன. அங்கிருந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. நிலநடுக்க மையப்பகுதிக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஹட்டாய் மாகாணத்தில் மட்டும் 1,500 கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து தரை மட்டமாகி இருக்கின்றன.

இடிந்துள்ள கட்டிடங்களை நவீன எந்திரங்களின் உதவியுடன் அப்புறப்படுத்தி சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தோண்ட தோண்ட பிணங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. கட்டிடங்களின் இடிப்பாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மீட்பு பணியில் முதல் கட்ட நடவடிக்கையாக 2300 பேர் பலியானதாக தகவல் வந்தது. ஆனால் நேற்று இரவு வந்த தகவல் படி பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதையடுத்து துருக்கி மற்றும் சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 7900-ஐ தாண்டி உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.  துருக்கியின் 10 மாகாணங்களில் மட்டும் 5,894 பேர்  இடிபாடுகளில் சிக்கி மண்ணோடு புதைந்து மரணத்தை தழுவி உள்ளனர். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியா அரசின் பகுதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகள் ஆகிய பாதிப்படைந்து அங்கேயும் ஆயிரக்கணக்கான மக்கள் மரணத்தை தழுவியுள்ளனர். பேரழிவினால் பாதிக்கப்பட்ட இவ்விரு நாடுகளுக்கும் பல்வேறு உலக நாடுகள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன. தென் கொரியா மீட்பு படையினை அனுப்பி வைத்துள்ளது.  பாகிஸ்தான் மீட்பு படையுடன் நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் அங்காரா சென்று நேரில் இரங்கல் தெரிவிக்கிறார். அதேபோல் அமெரிக்க அதிபர் ஜோபைடன் துருக்கி அதிபரை தொலைபேசியில் அழைத்துப் பேசி நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இங்கிலாந்து நாடும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

துருக்கி நாட்டிற்கு மட்டும் 65 நாடுகளில் இருந்து 2660 பேர் நிவாரண மற்றும் மீட்பு பணிகளுக்காக விரைவதாக அவசரகால பேரழிவு அமைப்பான அபாட் தெரிவித்துள்ளது. துருக்கியின் தென்கிழக்கு மாகாணமான கஹ்ராமன்மாராஸில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், அங்குள்ள டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட் மக்களை வீதிகளுக்கு வர வைத்ததுடன் வெகுதொலைவில் உள்ள  நகரமான கெய்ரோ வரை உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து வரும் நில அதிர்வுகளால் ஹட்டாய் மாகாணத்தில் மக்கள் திறந்தவெளிகளிலும் விளையாட்டு மைதானங்களிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் துருக்கியை மொத்தமாக உருக்குலைய வைத்துவிட்டது என்பதுதான் நிஜம். 

Previous articleபக்தர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் சிறப்பு பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!
Next articleபீதி அடையும் மக்கள்! தொடர்ந்து அதிகரித்து வரும் டைபாய்டு பாதிப்பு!