பந்தல் சரிந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கருமண்டபம் பகுதியில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்காக பரிசு வழங்கும் விழா நேற்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்காக மாணவர்களை சாமியானா பந்தலினுள் அமர வைக்கப்பட்டிருந்தனர். திடீரென கடுமையான காற்று வீசியதன் காரணமாக பந்தல் சரிந்து அதில் இருந்த இரும்பு கம்பிகள் மாணவர்களின் தலையில் விழுந்து குருதி வழிந்தது.
சில மாணவர்கள் பந்தலில் சிக்கி கை, கால்களில் காயம் அடைந்தனர். மேலும் ஆசிரியர் ஒருவருக்கும் தலையில் அடிப்பட்டது. காயம் அடைந்தவர்களை பள்ளி நிர்வாகம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறிய காயம் அடைந்த மாணவர்களுக்கு அங்கேயே முதலுதவி வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பதறினர். சில குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த பின்னர் அவர்களின் பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
மீதமுள்ள குழந்தைகளையும் விருப்பமான பெற்றோர்கள் அழைத்துச் செல்லலாம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து நிகழ்வு நடந்த இடத்தை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த பந்தலை போட்ட 5 தொழிலாளர்களிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த நிகழ்வு கருமண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.