கேரளாவின் குப்பை கூடமாக்கி விட்டது திமுக அரசு!! பாதயாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்!!
ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என எதிர்ப்பவர்கள் ஊழல்வாதிகள் தான் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2-வது கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் பாதயாத்திரையாக சென்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்களை சந்தித்து பேசினார்.
தேனி மாவட்டத்திலேயே 2-வது நாளாக கம்பம், போடியில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் பகலில் கண்டமனூர் அருகே உள்ள துரைசாமிபுரத்தில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களுடன் உரையாடினார். அந்த உரையாடலில் மத்திய அரசின் திட்டங்கள், மற்றும் மத்திய அரசு வழங்கும் மானியங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார்.
அந்தக் கூட்டத்தில் அவர் பேசும்பொழுது, இந்தியா முழுவதும் ஏராளமான மத்திய அரசு பள்ளிகள் செயல்படுகின்றன, ஆனால் தமிழகத்தில் மட்டும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. நிலம் கொடுக்க மாட்டேன் என மறுத்து விட்டனர்.மாநில அரசு தனது முடிவே மாற்றிக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் வருவதால் மக்களுக்கு நன்மையே விளையும். தவறு ஒன்றும் இல்லை என்று அவர் கூறினார்.
அடுத்ததாக கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகில் அவர் பாதயாத்திரை தொடங்கும் பொழுது இளைஞர்கள், இளம்பெண்கள், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
அப்போது அண்ணாமலை அவர்களிடம் கூறியதாவது,
கேரளாவின் குப்பைமேடாக கம்பத்தை மாற்றி விட்டார்கள். கேரளா கழிவுகள் கம்பத்தில் கொட்டப்பட்டு வருகின்றது. முதல்வர் ஸ்டாலினுக்கு கூட்டணி மட்டும்தான் முக்கியம், தமிழகம் நாசமாக போனால் கவலை இல்லை. கம்யூனிஸ்டுகளை திருப்திப்படுத்த கேரள குப்பைகள் தமிழகத்துக்கு வரும் பொழுது அதனை தடுத்து நிறுத்த தைரியம் இல்லாத அரசு திமுக அரசு என அவர் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் தெரிவித்தார்.
அது மட்டும் இல்லாமல் சாராய ஆலைகள் நடத்திக் கொண்டு டாஸ்மாக்கை மூடுவோம் என பொய் சொல்லும் திமுக அரசு கம்பத்தை தமிழகத்தின் கஞ்சா தலைநகராக மாற்றுவதற்கு துடித்துக் கொண்டு இருக்கிறது.இதையெல்லாம் மாற்றுவதற்கான நேரம் உங்களுக்கு இப்பொழுது வந்துவிட்டது. ஹிந்தி திணிப்பு என்கிறார்கள். ஆனால் 2010 ஆம் ஆண்டு நீட் தேர்வையும் கொண்டு வந்து விட்டு 2023 ஆம் ஆண்டு அதை எதிர்ப்பதற்கான தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளார்கள்.
அது மட்டுமா 2011- இல் ஜல்லிக்கட்டை தடை செய்ததே காங்கிரஸ்தான். ஆனால் அதன்பிறகு ஜல்லிக்கட்டு வேண்டும் என முழக்கம் இடுவார்களாம். மீத்தேன் திட்டம் தமிழகத்தில் டெல்டா மாவட்டத்தில் கொண்டுவர கையெழுத்து போடுவார்கள். ஆனால் மீத்தேன் திட்டம் வேண்டாம் என்று எதிர்பார்ப்பார்கள். இதுதான் தற்போதைய திமுக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்கள்.
அது மட்டுமா? உதயநிதியின் அம்மா கோவில் கோவிலாக போவார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் சனாதான தர்மம் வேண்டாமா? இதைவிட கேடுகெட்ட கட்சியை பார்த்து உள்ளீர்களா? சனாதான தர்மத்தில் மட்டும்தான் ஒரு மனிதன் கடவுளாக முடியும். ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊழல்வாதிகளாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் அதற்கு முன்பே 1971 இல் கருணாநிதி அவர்கள் இந்த நாட்டுக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என பேசி உள்ளார்.
உங்களது தீர்ப்பை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்றில் குறிக்கும் விதமாக 3-வது முறையாக பிரதமர் மோடியை பிரதமராக்க தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அதன் பின்னர் அவர் போடி நகரில் போஜன் பார்க் முதல் வ உ சி சிலை வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.