நோய் தொற்றின் இரண்டாவது அலையை சமாளிக்க இயலாமல் உலகம் முழுவதும் திண்டாடி வருகிறது. நம்முடைய நாட்டில் ஒரு நாளைக்கு மூன்று லட்சத்தை கடந்து வருகிறது இந்த நோய் தொற்று பாதிப்பு. இந்த நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள்.அந்த விதத்தில் மும்பையில் மனிஷா ஜாதவ் என்ற பெண் மருத்துவர் இந்த நோய் தொற்றினால் உயிரிழந்திருக்கிறார். மும்பை சிவ்ரி காசநோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியான மனிஷா ஜாதவ் சில நாட்களுக்கு முன்பு இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டார்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், இதுவே என்னுடைய கடைசி காணொளி இனி நான் உங்களை இங்கே சந்திக்கமாட்டேன். எல்லோரும் உங்களை பத்திரமாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு மரணம் என்பது உடலுக்கு தான் ஆத்மாவிற்கு கிடையாது என்று அவர் பேசியிருக்கிறார்.
இவ்வாறு பேசி வீடியோவை வெளியிட்ட சுமார் 19 மணி நேரத்தில் அவர் உயிரிழந்து இருக்கிறார். அவருடைய இழப்பு மாபெரும் சோகத்தை அந்த பகுதியில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய மருத்துவ சங்கத்தின் தகவல்படி மகாராஷ்டிராவை சேர்ந்த 18 ஆயிரம் மருத்துவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 168 பேர் இதுவரையில் தங்களுடைய உயிரை இழந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.