அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்… இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?

Photo of author

By Sakthi

 

அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்… இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?

 

கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் அமைச்சர் காலில் விழுந்து முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார்.

 

கோவை சுங்கம் பகுதியில் இருக்கும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஓய்வு எடுக்க வேண்டி குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் அரசு போக்குவரத்து டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களி பயன்பாட்டுக்காக இன்று(ஆகஸ்ட் 16) திறந்து வைத்தார்.

 

இதையடுத்து பணிமனை அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் சான்றிதழ்களையும் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் வழங்கினார். மேலும் பணிக்காலத்தில் இறந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணிக்கான ஆணைகளை வழங்கினார்.

 

இதையடுத்து மேடைக்கு ஆறுமாத குழந்தையுடன் ஒரு பேருந்து ஓட்டுநர் வந்தார். வந்தவர் திடீரென்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்களின் காலில் விழுந்து கோரிக்கை ஒன்றை வைத்தார். ஓட்டுநர் ஆறுமாத குழந்தையுடன் காலில் விழந்ததை பார்த்து பதறிய அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் காலில் விழுந்த அந்த ஓட்டுநரிடம் விசாரித்தார்.

 

அப்பொழுது ஓட்டுநர் அவருடைய பெயர் கண்ணன் என்றும் அவரு பணியிட மாறுதல் வேண்டும் என்றும் கூறினார்.

 

ஓட்டுநர் கண்ணன் அவர்கள் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்களிடம் “எனது மனைவி முனிதா டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். குழந்தைகளை பார்த்துக் கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. இதனால் எனக்கு தேனிக்கு பணியட மாறுதல் வேண்டும். பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனாத் நீங்கள் என் கோரிக்கையை ஏற்று தேனிக்கு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன் அவர்கள் “என்னுடைய சொந்த ஊர் தேனி ஆகும். எனக்கு திருமணம் ஆகி 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் எனது மனைவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். எனது இரண்டு பெண் குழந்தைகளையும், என்னுடைய தாய், தந்தை இருவரையும் நான்தான் பார்த்து வருகிறேன்” என்று கூறினார்.