வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளைஞரை துன்புறுத்தி மொட்டை அடித்த சம்பவம் சேலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாய்க்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்குமார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். ஏத்தாப்பூர் அடுத்த தாண்டனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் திருமணம் செய்து வைக்கும்படி வீட்டாரிடம் பேசிய பொழுது சிறுமி மைனர் என்பதாலும் மற்றும் வேற்று ஜாதி சமூகத்தினர் என்பதனாலும் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்புகள் பெருகி வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள். இதனால் அருள் குமாரின் தாயார் மைனர் பெண்ணை கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அருள்குமார் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காதல் ஜோடிகளை தேடி வந்தனர்.
வீட்டை விட்டு சென்ற இளம் ஜோடிகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி பாளையம் என்ற ஊரில் குடும்பம் நடத்தி வந்தது அருள்குமாரின் குடும்பத்தாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அருள் குமாரின் தாயார் மற்றும் சகோதரர்கள் காரில் சென்று பள்ளிபாளையத்தில் உள்ள அருள் குமாரை கட்டாயப்படுத்தி, துன்புறுத்தி, அடித்து சின்னமநாயக்கன்பாளையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் அவரை தென்னை மட்டையால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அங்கு யாருக்கும் தெரியாமல் அவருக்கு மொட்டை அடித்து உள்ளனர்.
தகவலறிந்த சிறுமி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே சிறுமி அளித்த புகாரின் பெயரில் அருள்குமாரை மீட்டு சேலம் மருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர்.மேலும் அருள்குமாரை கொடூரமாக தாக்கி மொட்டையடித்த அவரது தாயார் அபிலா, சகோதரர்கள் நேரு ,வெங்கடேசன், அக்கா பரிமளா, அருள்குமாரின் சித்தப்பா மகன்கள் மணிகண்டன், மற்றும் ரகுநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் 17 வயது மைனர் சிறுமியை திருமணம் செய்ததால் அருள் குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.