பள்ளி நிலை குறித்து வீடியோ வெளியிட்ட சிறுமி.. மிரட்டிய கவுன்சிலர்!!
கடந்த சில தினங்களுக்கு தனது பள்ளியின் நிலை குறித்து வீடியோ வெளியிட்ட சிறுமி அஹிம்சாவை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஏனெனில் நடந்து முடிந்த தேர்தலில் வாக்குச்சாவடியாக பயன்படுத்தப்பட்ட முகப்பேரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் நிலை குறித்து அப்பள்ளி மாணவி அஹிம்சா வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார்.
அரசு அதிகாரிகளான நீங்கள் இப்படி எங்கள் பள்ளியை அசுத்தம் செய்யலாமா? படித்த உங்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் கூடவா தெரியாது? என மிகவும் தைரியமாக கேள்வி எழுப்பி இருந்தார். சிறுமியின் இந்த வீடியோவிற்கு பின்னரே வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளி வளாகங்கள் சுத்தமாகவும், சேதமடையாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மாணவி அஹிம்சாவின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை கல்வி அதிகாரிகளும், வார்டு கவுன்சிலரும் மிரட்டுவதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறியதாவது, “வளாகம் முழுவதும் சிதறி கிடந்த குப்பைகள் மற்றும் வகுப்பறையில் இருந்த உடைந்த பலகைகளால் என் குழந்தை மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார்.
அதனால் தான் நாங்கள் வீடியோ எடுத்து பதிவு செய்தோம். ஆனால் நாங்கள் அரசுக்கு எதிராக சதி செய்வதாக கவுன்சிலரும் கல்வித்துறை அதிகாரிகளும் குற்றம் சாட்டுகின்றனர்” என கூறியுள்ளனர். ஆனால் இதை மறுத்துள்ள கவுன்சிலர் சமூக ஊடகங்களில் பிரச்சனைகளை முன்வைக்கும் முன் என் கவனத்திற்கு கொண்டு வருமாறு கூறியது உண்மை தான். ஆனால் நான் யாரையும் அச்சுறுத்தவில்லை என கூறியுள்ளார்.