காதலன் தற்கொலை செய்து கொண்டால் காதலி பொறுப்பல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி..!!
கடந்த ஆண்டில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ஒருவரின் தந்தை தனது மகனை தற்கொலைக்கு தூண்டியது அவர் காதலித்த பெண்ணும், அந்த பெண்ணின் தோழியும் தான் என்று கூறி புகார் அளித்திருந்தார். மேலும், அந்த இளைஞரும் அவரது தற்கொலை குறிப்பில் இந்த இரண்டு பெண்களின் பெயரை குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு இரு பெண்களும் தாக்கல் செய்திருந்ததனர்.இந்த முன் ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாஜன், “பலவீனமான மனநிலை கொண்ட ஒரு நபர் எடுக்கும் தவறான முடிவுக்கு மற்றொரு நபரை குறை சொல்ல முடியாது.
அதேபோல காதல் தோல்வியால் காதலன் தற்கொலை செய்து கொண்டாலோ, தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டாலோ காதலியோ அல்லது தேர்வு நடத்துபவரோ அந்த தற்கொலைக்கு பொறுப்பாக முடியாது. மேலும், இந்த தற்கொலை குறிப்பு இறந்தவரின் வேதனையின் நிலையை மட்டுமே வெளிப்படுத்துகிறது.
இவர்கள் இருவரின் வாட்ஸ் அப் மெசேஜ்களை வைத்து பார்க்கும்போது இறந்த நபர் மிகவும் சென்சிட்டிவான நபர் என்பது தெரிகிறது.அதுமட்டுமல்ல அந்த பெண் தன்னுடன் பேச மறுக்கும் போதெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார் என்று கூறி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களுக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.