மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து முடிகண்டநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்ததின் கீழ் பட்டை (ஆங்கில்) உடைந்து சாலையில் கவிழும் நிலைக்கு சென்றது. ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 79 நகரப்பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி பாதிவழியில் டயர்வெடித்தும், படிக்கட்டுகள் உடைந்து விழுவதும், பழுதடைந்து பாதியிலேயே நிற்பதும், விபத்து நடப்பதும் தொடர்கதையாக இருக்கிறது என குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் தடம் எண் 37 ஆம் நம்பர் அரசு பேருந்து மயிலாடுதுறை பேருந்துநிலையத்திலிருந்து 70 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நீடுர், கொற்கை, வரகடை, மணல்மேடு வழியாக முடிகண்டநல்லூர் கிராமத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
புறப்பட்ட அரை கிலோமீட்டர் தூரத்திலேயே காவேரி புது பாலம் அருகே பேருந்தில் திடீரென உடையும் சத்தம் கேட்டு பேருந்து சாலையில் கவிழும் நிலைக்கு சென்றது.
இதை அறிந்த ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தியதால் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
மேலும் பேருந்தின் கீழ் பட்டை (ஆங்கில்) உடைந்ததால் பேருந்து பாதி வழியிலேயே நின்றுவிட்டது. பேருந்தில் பயணித்த பயணிகள் இறக்கி விடப்பட்டு அரை மணி நேரத்திற்கு மேலாகியும் மாற்று பேருந்து கிடைக்காததால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சாலையில் ஓரமாக தரையில் அமர்ந்து தவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்கு மாலை 3.30 மணிக்கு வர வேண்டிய பேருந்து தாமதமாக 4 மணிக்கு தான் வந்தது. முடிகண்டநல்லூர் கிராமத்திற்கு “அத்தி பூத்தார் போல்” எப்போதாவது தான் பேருந்து வரும் அதுவும் தற்போது பழுதாகி நின்று விட்டது என்று பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
மேலும், ஏழை எளியோர் பயன்படுத்தும் அரசு பேருந்துகளை சரி செய்து பழைய பேருந்துகளை உடனடியாக சீரமைத்து, நல்ல உதிரிபாகங்கள் உடன் இயக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.