இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றானது கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல குறைந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக அதனை கட்டுப்படுத்த வேண்டி மாநிலங்களுக்கு மத்திய அரசு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளன.
ஒமிக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் தற்போது கொரோனா வைரஸானது மீண்டும் நாடெங்கும் அதிகரிக்க தொடக்கி இருக்கிறது. இதனால் முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,379 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு 3,49,60,261 ஆக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கை வசதிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை செய்து வருகின்றனர்.