அரசு பஸ்சை ஆட்டோ டிரைவர் ஓட்டிச் சென்ற சம்பவம்! 2 பேர் பணி இடைநீக்கம்!
தேனியில் கைலி அணிந்து அரசு பஸ்சை ஆட்டோ டிரைவர் ஓட்டிச் சென்ற சம்பவம் தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர் தேனி அருகே வீரபாண்டியில் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி தேனியில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அரசு பஸ்சை கைலி அணிந்த நிலையில் ஒருவர் ஓட்டிச் சென்றார். அவ்வாறு கைலியுடன் பஸ்சை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தேனி அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவத்தன்று அந்த அரசு பஸ்சை எடுத்துச் சென்ற டிரைவர், தனது நண்பரான ஆட்டோ டிரைவர் ஆசைபட்டு கேட்டுக் கொண்டதால் அவரிடம் பஸ்சை ஓட்டுவதற்கு வழங்கியதாகவும், அவர் சிறிது தூரம் பஸ்சை ஓட்டிச் சென்றதாகவும் தெரியவந்தது.
பணி இடைநீக்கம்
இதுகுறித்து தேனி அரசு போக்குவரத்து கழக மேலாளர் சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட பஸ்சை ஆட்டோ டிரைவர் கைலியுடன் ஓட்டிச் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த பஸ்சின் டிரைவர் பாண்டி விஸ்வநாதன், கண்டக்டர் வினோத்குமார் ஆகிய 2 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பஸ்சை வேறு நபருக்கு ஓட்டுவதற்கு அனுமதித்ததால் டிரைவர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்ததால் கண்டக்டர் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.இந்த சம்பவம் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.