கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பதவியேற்பு!!

Photo of author

By Savitha

கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பதவியேற்பு!!

கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் 16வது சட்டமன்றத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. மாநிலத்தின் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் மட்டுமல்லாது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் இன்று முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்களாக சபாநாயகர் முன் பதவி ஏற்கும் நிகழ்வு சட்டப்பேரவையில் நடைபெற்றது.

பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் சட்டமன்ற உறுப்பினர்களிடையே பேசிய தற்காலிக சபாநாயகர் ஆர். வி. தேஷ் பாண்டே, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது அரசியலமைப்பு மற்றும் கடவுளின் மீது மட்டும் சத்தியம் செய்து பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும், தனிநபர் பெயர் எதையும் குறிப்பிடக் கூடாது என உத்தரவிட்டார்.

ஆனால் சன்னகிரி தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏ பசவராஜு சிவகங்கா உறுப்பினர் பதவி ஏற்கும் போது கடவுள் மட்டுமல்லாது தனது மானசீக கடவுள் என டி.கே. சிவக்குமாரின் பெயரை குறிப்பிட்டு பதவி பிரமாணம் செய்து கொண்டார். இதைக் கேட்ட பாஜகவின் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய நிலையில், சபாநாயகர் தேஷ் பாண்டே, அவரை எதுவும் கண்டிக்காமல் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தார்.

ஆனால் இதைத் தொடர்ந்து வந்த சுல்லியா சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் சட்டமன்ற உறுப்பினர் பாக்யரதி முருல்யா பதவி பிரமாணம் செய்த போது தனது குலதெய்வம் பெயரிலும் தனக்கு வாக்களித்த வாக்காளர்கள் பெயரிலும் பதவி பிரமாணம் செய்தார்.

இதை கேட்ட சபாநாயகர் ஆர் வி தேஷ்பாண்டே அவையில் கடவுள் பெயரிலோ அல்லது இந்திய அரசியல் அமைப்பு பெயரில் மட்டுமே பதவி பிரமாணம் செய்ய வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தார். பின்பு அனைவரும் சபாநாயகர் அறிவுரையை ஏற்று அதன் அடிப்படையில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

ஆர். வி. தேஷ் பாண்டே, சபாநாயகர்;

இந்திய அரசியலமைப்பின் படி அரசியல் சாசனத்தின் மீது அல்லது கடவுளின் மீது சத்தியம் செய்து உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளலாம் யாருடைய தனிப்பட்ட பெயரையும் குறிப்பிடக் கூடாது அது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது.

பசவராஜ் சிவகங்கா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்;

மனப்பூர்வமாக செய்வேன் என்று கடவுள் பெயரிலும் நான் வழிபடும் தெய்வம் டி கே சிவகுமார் பெயரிலும் பிரமாணம் செய்கிறேன். பாக்யரதி முருல்யா, பெண் சட்டமன்ற உறுப்பினர்.எனது குலதெய்வம் உண்மையின் உருவமான அம்மன் பெயரிலும் மற்றும் வாக்காளர்கள் பெயரிலும் பதவி பிரமாணம் செய்கிறேன்.

ஆர் வி தேஷ் பாண்டே, சபாநாயகர் தயவு செய்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இந்திய இறையாண்மை படி பதவி பிரமாணம் செய்யுங்கள். கடவுள் பெயரில் பிரமாணம் எடுக்கலாம் இந்திய அரசியல் அமைப்பு மீது பிரமாணம் எடுக்கலாம். வேறு பெயரில் எடுக்க வேண்டாம்.