பெண்ணைக் கொன்றவர் கைது!! உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூரம்!!
கடந்த 17ம் தேதி ஐதராபாத் முசி ஆற்றங்கரை அருகில் தூய்மை பணியாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்போது அங்கு கருப்பு நிறக் கவரில் பெண்ணின் தலை ஒன்று இருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த போலீசார் அந்த தலையை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர்.
பெண்ணின் தலை மட்டும் கிடைத்ததால் போலீசாருக்கு வேறு எந்த விபரங்களும் தெரியவில்லை. அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் சோதனை செய்தனர். அதில் பார்த்தபோது அந்த பகுதியில் பிளாஸ்டிக் கவர்கள் வீசியவர்களை மட்டும் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சந்திரமோகன் என்பவர் சிக்கினார்.
அவரிடம் விசாரித்த போது அந்த பெண்ணின் தலையை அவர்தான் வீசியதாக ஒத்துக்கொண்டார். மேலும் அந்த பெண்ணின் பெயர் அனுராதா ரெட்டி, அவர் சந்திரமோகன் வீட்டில் குடியிருந்து வந்துள்ளார் . கணவனை இழந்த அவர் தன் மகளுடன் அந்த வீட்டில் வசித்துள்ளார். சந்திரமோகனும், அனுராதா ரெட்டியும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
மேலும் சந்திரமோகன் அந்த பெண்ணிடம் இருந்து சிறிது சிறிதாக 7 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார். கொரோனா காலத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அனுராதா கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பங்குசந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அனுராதா தினமும் பணம் கேட்டு சண்டையிடுவதால் அவரைக் கொன்று பணப்பிரச்சினையை முடித்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்.
மே 12ம் தேதியும் இருவருக்குமிடையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அவரை கொல்லும் எண்ணத்தில் இருந்த சந்திரமோகன் கையில் இருந்த கத்தியால் அவரை குத்தி கொலை செய்தார். பிறகு கட்டிங் மிஷின் வாங்கி அனுராதாவின் தலையை வெட்டியுள்ளார். அதன்பின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார்.
இரண்டு நாட்கள் கழித்து மே 15ம் தேதி குப்பையோடு குப்பையாக அனுராதாவின் தலையை முசி ஆற்றங்கரை பகுதியில் வீசியுள்ளார். போலீசார் உடலின் மற்ற பாகங்களை பற்றி விசாரித்தபோது, துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக பிரிட்ஜில் வைத்திருப்பதாக கூறினார். கொலை செய்த பிறகு டெட்டால் மற்றும் பினாயில் போட்டு வீட்டை சுத்தம் செய்துள்ளார்.
துர்நாற்றம் வீசக்கூடாது என தினமும் ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி போட்டுள்ளார். மேலும் அனுராதா இறந்தது அவர்களுடைய உறவினர்களுக்கு தெரியகூடாது என்பதற்காக அவரது போனில் இருந்து சந்திரமோகன் மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த சாரதா என்ற பெண்ணின் கொலை வழக்கை நியாபகப்படுத்துவதாக உள்ளது.