ஆட்டோ ஓட்டிய அமைச்சர்! திகைத்துப்போன பொதுமக்கள்!

Photo of author

By Sakthi

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்களின் முயற்சியில் கரூர் அருகே இருக்கின்ற காந்திகிராமம் பகுதியில் மருத்துவக்கல்லூரி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரிக்கு இரு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதோடு பொதுமக்களின் வசதிக்காக அந்தப் பகுதியில் ஆட்டோ நிறுத்தும் இடமும் திறக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதிமுக சார்பாக அமைத்துக் கொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஆட்டோ ஸ்டாண்டில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

அந்த விழா முடிவுற்றதும் திருச்சி மற்றும் கரூர் ரோட்டில் கார்னர் பகுதியில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் வரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம் .ஆர். விஜயபாஸ்கர் ஆட்டோவை பயணிகளை அமரவைத்து தானே ஓட்டிச் சென்றார் .பொங்கல் அன்றும் இதே போல அமைச்சர் விஜயபாஸ்கர் ஆட்டோ ஓட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது மாவட்டத்தின் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ரங்கராஜ், மற்றும் நகர செயலாளர் ஜெயராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணை தலைவர் தானேஷ், போன்றோர் அமைச்சருடன் இருந்தார்கள்.