சமீபத்தில் திருப்பரங்குன்ற மலையின் மேலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை முஸ்லிம் அமைப்பினர் செய்ய முற்பட்டு இருந்திருந்தனர். இதனை அடுத்து அங்கு பரபரப்பாக பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. அறுபடை கோயில்களில் முக்கிய ஸ்தலமான திருப்பரங்குன்றத்தில் பலியிடக் கூடாது என்று பல இந்து அமைப்பினர் இணைந்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் மதுரையில், கலெக்டரின் உத்தரவால் 144 தடை உத்திரவு கலவரத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக பிறப்பிக்கப்பட்டிருந்தது. பல்வேறு இந்து அமைப்பினர் இணைந்து இன்று போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், இரண்டு நாட்களாக 144 தடை உத்தரவோடு மேலும் பாதுகாப்பிற்காக திருப்பரங்குன்றம் மலையிலும், சுற்றுவட்டார பாதையை சுற்றிலும் 3000 போலீசாருக்கு மேலாக குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்சமயம் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தொண்டர்களுடன் புறப்பட்டதால் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் எதிரொலியாக இந்து முன்னணி அமைப்பினர் தாராபுரம் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருப்பரங்குன்றம் மலையில் போலீசாருக்கும், சில தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மேலும் புனிதமிக்க திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் போன்ற முழக்கம் ஒலிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது. இப்போராட்டத்தில் தென் மாவட்ட முன்னணி இந்து அமைப்பு தலைவர்கள் பங்கேற்காத வகையில் போலீசாரால் தடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தடையை மீறி வருபவர்களை போலீசார் கைது செய்தும், வாகனத்தை பறிமுதல் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டு மேலும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிர பாதுகாப்போடு அந்த இடம் அடைக்கப்பட்டுள்ளது மற்றும் சுற்றியுள்ள உணவகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 முதல் 6:00 மணி அளவில் பழங்காநத்தத்தில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்திக் கொள்ளுமாறு ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், எந்த ஒரு மதத்தை சாடுமாறு முழக்கங்கள் இருக்கக் கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கக்கூடாது என்றும், கட்சி கொடிகள் பயன்படுத்தக் கூடாது என்றும், கூட்டத்தில் ஒரு மைக்குக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்றும் பல விதிமுறைகளை விதித்துள்ளது.