ஆடு திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

Photo of author

By Savitha

ஆடு திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

Savitha

ஓமலூர் அருகே வீட்டில் கட்டி இருந்த ஆட்டை திருடி கொண்டு சென்ற போது பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் திருடனை ஒப்படைத்தனர் திருடனை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கூகுட்டைப்பட்டி ஊராட்சி தின்னப்பட்டி மாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 55 வயதானவர். இவர் 25 ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மீண்டும் மாலை வீட்டில் கொண்டு வந்து கட்டி வைத்துவிட்டு வீட்டுக்குள் படுத்துக்கொண்டார்.

இரவு 10 மணிக்கு ஆடுகள் கத்துவதை அறிந்து வெளியே வந்து பார்த்தபோது ஒரு வாலிபர் ஆட்டை தனது இரு சக்கர வாகனத்தில் கட்டி எடுத்துச் செல்ல முற்பட்டபோது சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் வந்து திருடனை பிடித்துக் கொண்டனர். தொடர்ந்து திருடன் அங்கேயே நெஞ்சுவலிப்பதாக கூறி கீழே விழுந்தவனை ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

திருடன் ஆடு திருட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இதைத்தொடர்ந்து உடனடியாக ஓமலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற போலீசார் அங்கு மருத்துவரிடம் விசாரித்த போது எந்தவிதமான நோயும் இல்லை எனவும் நெஞ்சு வலி இல்லை என கூறியதை தொடர்ந்து திருடனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சித்தன் என்பவரது மகன் தேவராஜ் 24 என்பதும் வழக்கமாக இந்த பகுதியில் ஆடுகளை திருடி வந்ததும் தெரிய வந்தது இதைத்தொடர்ந்து ஆடு திருடிய குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஆடு திருட வந்த திருடனை பொதுமக்கள் பிடித்துக் கொண்டதால் தப்பிப்பதற்காக நெஞ்சுவலிப்பதாக நடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.