அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு ஓட்டம் பிடித்த பயணிகள்!!
ரயில் நிலையத்தில் திடீரென சூறைக்காற்று வீசியதில் மேற்கூரை பறந்து வந்தது. இதனால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பரபரப்பான இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
தமிழக மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்த போதிலும் ஆங்காங்கே மழையும் பெய்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோல விழுப்புரத்தில் இரண்டு மாதங்களாக வெயில் காய்ச்சினாலும் மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழையும் பெய்து ஓரளவுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று வீசியதுடன் மழையும் பெய்தது. வேகமான காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விழுப்புரம் ரயில்வே நிலைய வளாகத்தில் இருந்த மரம், மற்றும் நகராட்சி பூங்காவில் இருந்த இருந்த மரம்,கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்தன. ரயில் நிலையத்தில் 2- வது மற்றும் 3-வது நடைமேடைகளில் இருந்த பழைய மேற்கூரைகள் அகற்றப்பட்டு அங்கு புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது திடீரென அங்கு பலத்த சூறைக்காற்று வேகமாக வீசியதால் மேற்கூரை அமைக்கும் பணியை ஊழியர்கள் பாதியிலேயே கைவிட்டு அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். வேகமாக வீசிய காற்றினால் சரியாக பொருத்தப்படாத மேற்கூரைகள் காற்றில் பறந்தன.
பறந்து சென்ற மேற்கூரைகள் அங்கு நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் பக்கத்தில் விழவே அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சரியான நேரத்தில் பயணிகள் பார்த்ததால் கூரைகள் மேலே விழாமல் விட்டதுடன் மக்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து மழை ஓய்ந்ததும் மறுநாள் காலை வழக்கம் போல் ரயில் நிலையத்தில் புதிய மேற்கூரைகள் மீண்டும் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. திடீரென சூறைக்காற்று வீசியதும், மேற்கூரை பறந்ததும் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.