பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! எங்கே தெரியுமா!

Photo of author

By Sakthi

கடந்த சனிக்கிழமை அன்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுற்றது. இந்தநிலையில் 294 சட்டசபை தொகுதிகளை கொண்டிருக்கும் மேற்குவங்க மாநில சட்டசபைக்கு 8 கட்டங்களாகவும் 126 சட்டசபை தொகுதிகளை கொண்டிருக்கும் அசாம் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் 47 சட்டசபை தொகுதிகளுக்கும், முதல்கட்டமாக கடந்த சனிக்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதனை அடுத்து மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கு அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தல் இன்றையதினம் நடைபெற்று வருகிறது.

இதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் 10 ஆயிரத்து 620 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 171 வேட்பாளர்கள் களம் காண இருக்கிறார்கள் இந்த நிலையில், சுமார் 76 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பாக சுவேந்து அதிகாரி களம் காண்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதன்காரணமாக நந்திகிராம் தொகுதி தேசிய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஹுமாயூன் கபூர் பாரதி கோஷ் நடிகை சாயந்திகா பானர்ஜி முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் டிண்டா பெரோசா பிபி உள்ளிட்ட மிக முக்கிய வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். தேர்தலில் எந்தவித அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் தடுப்பதற்காக சுமார் 650 துணை ராணுவ படையினர் மற்றும் 12 ஆயிரம் காவல்துறையினர் களமிறக்கப்பட்டிருக்கின்றார்கள். பதற்றமான தொகுதிகளில் ஒன்றாக இருந்து வரும் நந்திகிராம் தொகுதியில் மட்டும் சுமார் 20 குழுக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதோடு அந்த தொகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

அதேபோல அஸ்ஸாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 345 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். 73 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்த தகுதியுடன் இருக்கிறார்கள். வாக்குப்பதிவை கண்காணிப்பதற்காக 730 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 50% வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.