தமிழில் பெயர் எழுதும்போது முழு எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பள்ளி ,கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று 2021 மற்றும் 22 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து தமிழ்வளர்ச்சி இயக்குனர் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார், அதில் 1956-ஆம் வருடம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின் முதன்மை பணியாக அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எல்லோரும் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என்று கடந்த 1978ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி அன்று ஆணை வெளியிடப்பட்டது என தெரிவித்து இருக்கிறார். அதோடு தங்கள் பெயர்களில் தலை எழுத்துக்களையும், அதாவது தாய் மற்றும் தந்தை பெயர்களின் இணிஷியல் உள்ளிட்டவற்றை தங்களுடைய பெயருக்கு முன்பு தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று கடந்த 1998ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று உத்தரவிடப்பட்டது. ஆனால் கையெழுத்து மற்றும் முன்னெழுத்து உள்ளிட்டவற்றை தமிழில் எழுத வேண்டும் என்ற உத்தரவு முழுமையாக பின்பற்றப்படுவது இல்லை என கூறியிருக்கிறார்.
ஆகவே முன்பு பிறப்பிக்கப்பட்ட அரசானைப்படியும் தற்போது, வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையிலும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை எல்லா அரசு ஊழியர்களும் அனைத்து ஆவணங்களிலும் தங்களுடைய பெயரை எழுதும்போது, கையொப்பமிடும் போதும், கையெழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் என்று வலியுறுத்தி மறுபடியும் ஆணை பிறப்பிக்கலாம் என்று அந்த கடிதத்தில் தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு அவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழில் பெயர் எழுதும் போது ஆரம்பிக்குமுன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
தமிழ் வளர்ச்சி இயக்குனரின் இந்த கருத்துருவை அரசு ஏற்றுக்கொள்கிறது அதற்கு ஏற்றவாறு ஆணை பிறப்பித்து அதனடிப்படையில் முதலமைச்சர் முதல், கடைநிலை ஊழியர்கள் வரை, அரசு அலுவலர்கள் தமிழில் கையொப்பம் இடவும், முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் மறுபடியும் வலியுறுத்தப்படுகின்றன. மாணவர்கள் கையொப்பம் இடும் போது அனைத்து சூழ்நிலைகளிலும் தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தலைமைச் செயலகம் முதல், கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசு துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள், ஆவணங்களில் பொதுமக்களின் பெயரைக் குறிப்பிடும் போது முன்னிறுத்தும் உட்பட பெயர் முழுவதையும் தமிழில் மட்டுமே பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. அரசிடம் வழங்கும் விண்ணப்பங்களிலும் பொதுமக்கள் இதையே பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும் விதத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், மக்களுக்கு தெரியும் விதத்திலும் தமிழின் பெருமை முன்னேற்றத்தையும் கையொப்பத்தையும் தமிழில் இடுவதில் இருக்கின்ற பெருமிதம் உள்ளிட்டவற்றை சுவரொட்டிகள் அமைத்து தெரியப்படுத்த வேண்டும். உடனடியாக இது அமலுக்கு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.