முதல்வரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம்!!

Photo of author

By Savitha

முதல்வரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம்!!

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த கோரியும், மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பிட கோரியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு முன்பு 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரன், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் செயல்படுத்துவதை கைவிட்டு சத்துணவு ஊழியர்களை கொண்டு அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருக்கிறோம்.

காலை சிற்றுண்டி திட்டத்தை நாங்கள் மனதார வரவேற்கிறோம். ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை அரசு சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.

அதேபோல சத்துணவு மையங்களில் கடந்த ஏழு வருடங்களுக்கு மேல் 40000 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது, வருகின்ற ஜூன் மாதம் முதல் பள்ளி திறந்தால் முறையான சத்துணவு வழங்கப்படுமா என்ற கேள்வி எழும் அளவிற்கு காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

சுய உதவி குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் வருங்காலத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு தனியாரின் கைகளுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

சத்துணவு திட்டத்தை எப்படி உலகம் போற்றும் திட்டமாக மாற்றினார்களோ அதே போல காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தையும் உலகம் போற்றும் திட்டமாக மாற்றக்கூடிய சக்தி சத்துணவு ஊழியர்களிடம் உள்ளது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் எங்களது கோரிக்கைகளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.