பத்து வயது மாணவனை அடித்து தாக்கிய ஆசிரியர்! போலீசார் வலை வீச்சு!
கார்நாடகா மாநிலத்தில் கடாக் மாவட்டத்தில் நர்குண்ட் பகுதிகளில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது.அங்கு செயல்பட்டு வரும் பள்ளியில் முத்தப்பா ஹடகாலி என்ற ஒப்பந்த ஆசிரியர் பணிபுரிந்து வந்தார்.அப்போது அவர் அந்த பள்ளியில் படித்து வந்த 10 வயது கொண்ட மாணவர் பரத் என்பவரை இரும்பு கம்பி கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார்.மேலும் அவருடைய கோபம் தீராமல் பள்ளியில் முதல் தளத்தில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார்.
அப்போது அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அதனை தொடர்ந்து அந்த ஆசிரியரை தடுக்க வந்த மாணவனின் தாய் மற்றும் அந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் சக ஆசிரியர்கள் கீதா பரகெரா மற்றும் ஆசிரியர் நங்கன் பாட்டீல் ஆகியோரையும் ஒப்பந்த ஆசிரியர் முத்தப்பா கடுமையாக தாக்கி உள்ளார்.மேலும் அவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
ஒப்பந்த ஆசிரியர் முத்தப்பா தாக்கிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஒப்பந்த ஆசிரியர் இவ்வாறு மாணவனை தாக்குவதற்கு அதனை தடுக்க வந்தவர்களையும் தாக்கியதற்கு சரியான காரணம் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஒப்பந்த ஆசிரியரை வலை வீசி தேடி வருகின்றனர்.அவர் கிடைத்தால் மட்டுமே இந்த சம்பவத்திற்கான உண்மை காரணம் தெரியும் என போலீசார் தரப்பில் கூறி வருகின்றனர்.
பத்து வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.குழந்தைகளை எந்த நம்பிக்கையில் பள்ளிக்கு அனுப்புவது என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.