கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!!

Photo of author

By CineDesk

கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!!

வேலூர் மாவட்டம், இலவம்பாடியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட மேஸ்த்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுரேசுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினமும் சுரேஷ் குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இரவு 11 மணி அளவில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது லதா, அவரது கணவர் சுரேஷை திட்டியும், அடிக்கவும் செய்துள்ளார். பிறகு அருகில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து சுரேஷ் மீது ஊற்றி, உடனே தீப்பெட்டியை எடுத்து பற்றவும் வைத்துள்ளார்.

மண்ணெண்ணெய் ஊற்றியதால் தீ அவரது உடல் முழுவதும் மளமளவென பரவியது. சுரேஷ் வலியால் அலறியுள்ளார். சுரேஷின் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். உடனடியாக 108 க்கு போன் செய்து, ஆம்புலன்சை வரவழைத்து, அவரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சுரேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார்.

அவருக்கு 90% தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சுரேஷிடம் வாக்கு மூலம் வாங்கினர். பிறகு அவரது மனைவி லதாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.