மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன் போட்டி! சேலம் வீரர் தேர்வு!!

Photo of author

By Rupa

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன் போட்டி! சேலம் வீரர் தேர்வு!!

உலக அளவில் பல்வேறு சாம்பியன் போட்டிகள் நடைபெற்றாலும் அதில் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் பங்கு பெறுவது வழக்கம். ஆனால் இந்த போட்டிகளை விட அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் போட்டியாக மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் போட்டிகள் தான் தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது.

உடல் ஆரோக்கியத்துடன் உள்ள நபர்கள் தங்கள் திறமையை பல்வேறு வகையில் நிருபித்து வந்தாலும், மாற்றுத்திறனாளிகள் தங்களது உடல் குறைபாட்டுடன் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என பல தருணங்களில் நிருபித்துள்ளனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் சாரதா கல்லூரி பின்புறம் உள்ள மிட்டா புதூர் பகுதியை சேர்ந்த கோகுலக்கண்ணன் என்ற மாற்றுத்திறனாளி தன்னுடைய விடா முயற்சியினால் மாவட்ட மற்றும் மாநில போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான தங்கம், வெள்ளி, வெண்கலம், உள்ளிட்ட பரிசு பொருட்களை வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் இவரது அசாத்திய திறமைக்கு பரிசளிக்கும் விதமாக நேபாள நாட்டில் அடுத்த மாதம் நடைபெறும் கைபந்து உலக சாம்பியன் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மேலும் ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் உலக எறி பந்து போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

இது குறித்து கோகுலகண்ணன் தெரிவிக்கையில், தான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் என்னுடைய சக ஊழியர்கள் தரும் ஊக்கத்தினால் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பொருட்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வாங்கி உள்ளதாகவும், தற்போது நேபாளம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு எனது திறமையை நிரூபித்து சாதிக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளேன். ஆனால் அதற்கு போதிய நிதி தன்னிடம் இல்லை எனவே மத்திய மாநில அரசுகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எனக்கு போதிய நிதி அளித்து உதவிடுமாறு கேட்டு கொண்டுள்ளார்.