காவலர் பணியை தூக்கியெறிந்து ஆட்டுப்பண்ணையில் சாதித்த இளைஞர்..!!
தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார் கடந்த 2009ஆம் ஆண்டு காவலர் தேர்வெழுதி இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், வேலைப்பளு தான் அதிகரித்ததே தவிர சம்பளத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்ததாம். இதனால் சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுத்த சதீஷ் அவர் வேலையை விட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து இவர் காவலர் என்பதால் உடற்பயிற்சி கூடம் வைக்கலாமென முடிவு செய்து தஞ்சாவூரில் உடற்பயிற்சி கூடம் தொடங்கியுள்ளார். இருந்தாலும், கூடுதல் வருமானம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதால் வேறு ஒரு தொழில் செய்ய நினைத்த சதீஷ் ஆட்டுப்பண்ணை தொடங்கியுள்ளார்.
அதன்படி, கொடி ஆடு, சேலம் கருப்பு ஆடு இந்த இரண்டு வகையான ஆடுகளை மட்டுமே சதீஷ் வளர்த்து வருகிறார். இதற்கான பசுந்தீவனங்களை அவரே பயிரிட்டு வருகிறார். மேலும், ஆடுகளை நேரடியாக மக்களிடம் விற்பனை முடிவெடுத்த சதீஷ் சோசியல் மீடியாவில் வீடியோக்கள் பதிவு செய்ய தொடங்கியுள்ளார். அதன்மூலம் பண்டிகை மற்றும் விசேஷம் என மக்கள் அவர் பண்ணைக்கே நேரடியாக வந்து ஆடுகளை வாங்கி செல்கிறார்களாம்.
சிறிய ஆடுகளை வெளியில் இருந்து வாங்கி அதை வளர்த்து விற்பனை செய்வதன் மூலம் சதீஷ் நல்ல லாபம் கிடைப்பதாக கூறுகிறார். அதன்படி, ஒரு வருடத்திற்கு 120 ஆடுகள் விற்பனை செய்வதன் மூலம் 18 லட்சம் வருமானம் கிடைக்குமாம். அதில் செலவுகள் போக ஆண்டுக்கு 8.20 லட்சம் லாபம் கிடைக்கிறதாம்.
அரசு வேலையை உதறிவிட்டு ஆடு மேய்க்க போறியா என பலரும் சதீஷை ஆரம்பத்தில் கிண்டல் செய்துள்ளனர். ஆனால் சதீஷ் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவரது இலக்கை நோக்கி மட்டுமே பயணித்துள்ளார். அதன் காரணமாக இன்று பலருக்கும் முன்னோடியாக உள்ளார். இதுதவிர புதிதாக ஆட்டுப்பண்ணை வைக்க விரும்பும் நபர்களுக்கும் சதீஷ் ஆலோசனை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.