தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 25 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு
சென்னை வடபழனி ஆற்காடுசாலை என்எஸ்டி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்த்(55). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் கடந்த 23ஆம் தேதி தனது குடும்பாத்தாருடன் சொந்த ஊரான பெங்களுரூருக்கு சென்றுள்ளார்.
ஊருக்கு செல்லும் முன் வீட்டை பூட்டி அடுக்குமாடி காவலாளியிடம் வீட்டை சுத்தம் செய்ய வரும் வேலைக்கார பெண்ணிடம் சாவி கொடுத்து விட்டு வேலை முடிந்த உடன் சாவியை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 27ஆம் தேதி வீடு திரும்பிய ஆனந்த், நேற்று வீட்டின் பூஜை அறையை பார்த்த போது அங்கிருந்த 25கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து ஆனந்த் வடபழனி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் வீட்டு சாவியை காவலாளியிடம் கொடுத்து சென்றதாகவும் அப்போது வேலைக்கார பெண் வந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு சென்ற நிலையில் வீட்டில் இருந்த 25 கிலோ வெள்ளி பொருட்கள் காணாமல் போயுள்ளது. ஆகவே காவலாளி, மற்றும் வேலைக்கார பெண் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.அப்புகாரின் பேரில் போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஆனந்திடம் பணியாற்றும், ஓட்டுனர் இருவரிடமும் வீட்டின் சாவி உள்ளதாகவும் உரிமையாளர் தவிர ஓட்டுனர், காவலாளியிடமும் வீட்டின் சாவி உள்ளதால் பணியாற்றும் நபர்கள் தான் திருடி இருக்க வாய்ப்புள்ளது என்ற கோணத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.