BJP ADMK: பாஜகவில் மாநிலத் தலைவர்களின் பதவியானது மூன்று வருடத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். அதேபோல ஒரு தலைவர் இருமுறை மட்டுமே பதவி வகிக்கவும் முடியும். இப்படிப்பட்ட சூழலில் அண்ணாமலை மீண்டும் மாநில தலைவராக தொடர்வாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அதாவது அதிமுக மற்றும் பாஜக பரஸ்பர உறவு முறிந்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான். இதனால் அதிமுகவிற்கும் மேலிடத்திற்கும் பெரும் அழுத்தம் உண்டானது.
அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகியதால் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. அதேபோல இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்தால் மட்டுமே வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்க்க இவர்களுக்கு சாதகமாக அமையும். இதனையெல்லாம் சரிகட்டும் விதமாக அதிமுக பாஜக மேலிடத்திற்கு ஒரு சில நிபந்தனைகளை முன் வைத்தது. அதன்படி கட்டாயம் தமிழக பாஜக மாநில தலைவரை மாற்றியே ஆக வேண்டும் என கூறியது.
முதலில் இதனை மறுத்து வந்த டெல்லி மேலிடம் தற்பொழுது அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி தான் கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித்ஷா வை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இவரை தொடர்ந்து அண்ணாமலையும் சென்றிருந்தார். அவர்களுக்குள் நடந்த ஆலோசனை குறித்து அண்ணாமலை ஏதும் தெரிவிக்காமல், நான் சாதாரண தொண்டனாக கூட பாஜகவில் செயல்படுவேன் என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு அண்ணாமலை கூறியது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கட்டாயம் அண்ணாமலையை பதவி நீக்கம் செய்ய டெல்லி முடிவெடுத்து விட்டது, அதனால் தான் இவர் இப்படி கூறுகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். அதன்படி நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.