பெண்கள் கல்வி கற்பதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி…
சென்னையில் கொளத்தூரில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பெண்கள் கல்வி கற்பதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
சென்னையின் கொளத்தூரில் உள்ள அகரம் மார்கெட் தெருவில் இருக்கும் மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக 3 தளங்களுடன் கூடிய வகுப்பறை கட்டுவதற்காக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்த மூன்று தளங்கள் உள்ள கூடுதல் வகுப்பறையின் மதிப்பு 6.32 கோடி ரூபாய் ஆகும்.
மூன்று தளங்களுடன் கூடிய கூடுதல் வகுப்பறைக்கு அடிக்கல் நாட்டிய பிறகு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் பகுதியில் இருக்கும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பெண்கள் கல்வி கற்பதற்கு எந்தவித தடையும் விதிக்கக்கூடாது. எந்தவித தடையும் இருக்கக் கூடாது. கல்வி யாருக்கும் இலவசமாக கிடைத்து விடாது. கல்விதான் நம் தலைமுறையை உயர்த்துவதற்கான அச்சாரமாக இருக்கின்றது.
திமுக கட்சியின் தலைமையிலான தமிழகத்தின் ஆட்சியில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. பெண்கள் கல்வி கற்பது மிகவும் அவசியமான ஒன்று. அதனால் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதிக்ககூடாது. நான் மாநிலத்துக்குத்தான் முதல்வராக இருக்கிறேன். கொளத்தூருக்கு எம்.எல்.ஏவாகத் தான் இருக்கிறேன்” என்று கூறினார்.