கார் கண்ணாடியை உடைத்து லேப்-டாப் திருடி சென்ற திருடர்கள் கைது
புதுச்சேரியில் கார் கண்ணாடியை உடைத்து லேப்-டாப் திருடி சென்ற தமிழகத்தை சேர்ந்த பிரபல திருடர்களை சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேரு வீதியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி சென்னை கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் காரில் புதுச்சேரி வந்து ரங்கபிள்ளை வீதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அப்போது அவர்கள் உணவருந்த சென்ற போது அவர்களின் காரின் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் சிலர் லாப் டாப்பை திருடி சென்றனர். இது தொடர்பாக விஜயகுமார் பெரிய கடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் திருட்டில் ஈடுப்பட்டது திருச்சியை சேர்ந்த பிரபல திருடர்கள் பாலமுருகன் மற்றும் கிரிதரன் என தெரியவந்ததை அடுத்து அவர்களை பிடிக்க கிழக்கு தனிப்படை போலீசார் மற்றும் பெரிய கடை போலீசார் முயற்சி செய்து வந்த நிலையில் அவர்கள் மற்றொரு திருட்டு வழக்கில் சேலத்தில் பிடிப்பட்டதை அறிந்த போலீசார் அவர்களை சேலம் சிறையில் இருந்து புதுச்சேரி அழைத்து வந்து கோரிமேட்டில் ஒரு விடுதியில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த லேப் டாப்பை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள கிரிதரன் மீது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.