2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை எல்லா கட்சிகளும் இப்போதே ஆரம்பித்துவிட்டன. திமுக கட்சியின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் என்ன நடந்தாலும் நாங்க திமுகவை விட்டுக்கொடுக்கவே மாட்டோம் என்கிற மனநிலையில் செயல்பட்டு கூட்டணியில் நீடிக்கின்றன.
விஜய் தனது தவெக கூட்டணிக்குள் சிறிய கட்சிகளை கொண்டுவருவதற்கான பணிகளையும் ஆரம்பித்துவிட்டார். அதிமுக பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணிக்குள் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை கொண்டுவருவதற்காக அண்மையில் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
எங்கள் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ரத்தினக் கம்பளம் கொண்டு வரவேற்போம், அதிக தொகுதிகளை ஒதுக்குவோம் என்று பேட்டி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமியின் இந்த அறிவிப்பை விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஏற்கும் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி இது என்று விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஷண்முகம் எடப்பாடி விரிப்பது ரத்தினக்கம்பளம் அல்ல, வஞ்சக வலை என்று விமர்சித்துள்ளார். இந்நிலையில் விசிக குறித்து அதிமுக கல்யாணசுந்தரம் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதிமுகவை எவனாலும் அழிக்க முடியாது. எங்களை எச்சரிக்கும் விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.
விழிப்புடன் இருங்கள், விசிகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை திமுக விழுங்கிக்கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைபொதுச் செயலாரராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை உங்கள் கட்சியை விட்டு நீக்க வைத்ததே முதல்வர் ஸ்டாலின் தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று பேட்டி கொடுத்துள்ளார் கல்யாணசுந்தரம். இவரின் பேச்சு விசிக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.