நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்..!!
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், சமூகம் என சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, “ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு துறைகளில் சாதித்த நபர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறோம். அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராஜர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, மற்றும் சொம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை கடந்த 2007ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறோம்.
இதுதவிர 2022ஆம் ஆண்டு முதல் மார்க்ஸ் மாமணி விருதையும் வழங்கி வருகிறோம். இதுவரை கலைஞர், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் போன்ற பல தலைவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளோம். அந்த வரிசையில் 2024ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
அதன்படி இந்த ஆண்டிற்கான அம்பேத்கர் சுடர் விருதினை திரைப்படக் கலைஞரும், மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வரும் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் தொடர்பான கருத்துகளை கூறுவது, விமர்சிப்பது என பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இவர் மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.