இபிஎஸ்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்!
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக இபிஎஸ் வசமாகிவிட்டது. இந்நிலையில் இதற்கு அதிமுக கூட்டணி கட்சிகள் கூட வாழ்த்து தெரிவிப்பதற்கு முன்பே திமுக கூட்டணியில் இருக்கும் விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ட்விட்டர் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுகவின் பொதுச் செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்கு சான்றாக உள்ளது என்று இபிஎஸ்க்கு புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக’வை சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே’ என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக-விசிக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், விசிக அதிமுக கூட்டணியில் இணைய விரும்புவதாகவும் பல செய்திகள் வெளியாகி வரும் இந்த சூழலில் திருமாவளவன் இபிஎஸ்க்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.