வெள்ள பெருக்கால் கூவம் ஆற்றின் தரைப்பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அதிக அளவில் பொழிந்து வருவதால் பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடி வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வந்ததால் கேசரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரானது கடம்பத்தூர் அடுத்த சத்தரை கண்டிகை வழியாக கூவம் ஆற்றில் சென்று கலக்கிறது. அளவுக்கு அதிகமாக நீர் செல்வதால் சுங்குவாசத்திரம் செல்லும் தரைப்பாலம் தீடிரென சேதமடைந்துள்ளது.
இந்த தரைப்பாலம் கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக சுங்குவாசத்திரம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, அரக்கோணம் தண்டலம், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் சிலர் அதனை பொருட்படுத்தாமல் தாண்டி செல்வதால் காவல்துறையினர் அந்த பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளனர்.
கடந்த 2021 ம் ஆண்டு பருவமழையின் போதும் இந்த பாலம் சேதமடைந்த நிலையில், 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக சீரமைத்தனர். ஆனால், தற்போது மீண்டும் அந்த தரைப்பாலம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.