இனிமேல் தலைநகர் இதுதான்! அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட ஆந்திர முதல்வர்!
ஆந்திர மாநிலத்தின் தலைநகரை மாற்றி புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே இருந்த அமராவதியை மாற்றி விசாகப்பட்டினத்தை புதிய தலைநகராக மாற்றி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்த பிறகு ஹைதராபாத் தெலுங்கானாவின் நிரந்தர தலைநகரமாக மாறியது. எனவே ஆந்திராவிற்கு விஜயவாடா தற்காலிக தலைநகராக செயல்பட்டது. ஏற்கனவே தலைநகராக இருந்த விஜயவாடாவை மாற்றினார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. விஜயவாடாவை மாற்றிவிட்டு அமராவதியை தலைநகராக மாற்றி இருந்தார். ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி அமராவதியை தலைநகராக்கும் முடிவை கடுமையாக எதிர்த்தார்.
பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் 3 தலைநகரங்கள் ஆந்திராவில் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இதில் விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும், கர்நூலை நீதித்துறை தலைநகராகவும் மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி,
எங்கள் தலைநகராக இருக்கும் விசாகப்பட்டினத்திற்கு உங்களை அழைக்க வந்துள்ளேன். நானும் விசாகப்பட்டினத்திற்கு மாற இருக்கின்றேன். ஆந்திராவில் வாணிகம் செய்வது எவ்வளவு எளிது என்பதை நீங்களே பார்க்க உங்களையும் உங்கள் சக ஊழியர்களையும் அழைக்கிறேன் என்று கூறினார்.
இதன் மூலம் ஆந்திராவின் தலைநகர் விசாகப்பட்டினம் என்பதை அதிரடியாக அறிவித்தார் ஜெகன்மோகன் ரெட்டி. இதனால் மூன்று தலை நகரங்கள் அமைக்கப்படும் என்ற திட்டமும் கைவிடப்பட்டது.