எடப்பாடி பழனிச்சாமி எப்போது தமிழக முதல்வர் பதவி ஏற்றரோ அப்போது முதல் மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்தார். பாஜகவின் கொள்கைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் அவர் ஆதரித்தார். அதாவது பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் பாஜக மசோதாக்களை ஆதரித்து ஓட்டு போட்டார்கள். இதை அப்போதையை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். அதிமுக அடிமைகள் என ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்தது பழனிச்சாமிக்கு பெரும் தலைவலியாக இருந்தது.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி இணைந்து தமிழக தேர்தலை சந்தித்தது. ஆனால், அதில் திமுக வெற்றி பெற்றது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த இது திமுகவிற்கு சாதகமாகிப் போனது. 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2023 நாடாளுமன்ற தேர்தல் என இரண்டிலுமே அதிமுக தோல்வி அடைந்தது. ஒருபக்கம், அதிமுக தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சிக்க ‘இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என அறிவித்தார் பழனிச்சாமி. ஆனால், இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். பழனிச்சாமியின் மனமாற்றம் அரசியல் விமர்சகர்களாலும், மக்களாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டி கொடுத்த துக்ளக் குருமூர்த்தி பாஜகவுடன் கூட்டணி இல்லை என சொல்லிவிட்டு இப்போது பழனிச்சாமி மனம் மாறியது பற்றி பேசியிருக்கிறார். 2023 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதுதான் பழனிச்சாமியின் மனதை மாற்றியது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக வாங்கிய ஓட்டுகளை நாம் திரும்ப பெற வேண்டும் என நினைத்தார். எனவே, இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என சொல்லிவந்தார்.
ஆனால், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது அவரின் மனதை மாற்றிவிட்டது. பாஜக அழுத்தம் கொடுத்து கூட்டணிக்குள் அதிமுகவை கொண்டு வந்திருக்கிறது என்பதில் உண்மையில்லை. அதை செய்யமுடியும் எனில் கடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே அதை பாஜக செய்திருக்கும். மோடியின் வளர்ச்சியை கண்டு அதிமுக தலைவர்களே பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுத்தார்கள். பாஜகவின் வளர்ச்சியை புரிந்துகொண்டதால் பழனிச்சாமி மனம் மாறியிருக்கிறார்’ என பேசியிருக்கிறார்.