கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணமாய் உள்ளது. அதிலும் நடிகை விஜயலெட்சுமி விவகாரம் அடுத்த கட்டத்திற்கு சென்று நீதிமன்ற வழக்காகவும் மாறியது. இந்த பிரச்சனைகளுக்கு காரணம் சீமான் சமீபத்தில் பெரியாரை விமர்சித்து பேசியது தான் கரணம் என்று கூறப்பட்டது. அது ஒரு காரணமாக இருந்தாலும் உள்கட்சியிலேயே அவ்வப்போது எதாவது ஒரு பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. அந்த வகையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் பிரபல பேச்சாளராக கருதப்படும் சட்டை துரைமுருகன் விவகாரம் கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் வலுவான சமூக, அரசியல் விமர்சகராக அறியப்படும் சாட்டை துரைமுருகன், சமீபத்தில் தனது சமூக ஊடக பயோவில் நாதக கொள்கை பரப்புச் செயலாளர் என்று இருப்பதை நீக்கி விட்டு யூடூபர் கன்டென்ட் கிரியேட்டர் என மாற்றியுள்ளார். இது அவரது அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்படப்போவதாக பலரும் கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
சாட்டை துரைமுருகன் சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட சில கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசியதோடு, ஆன்லைனில் நித்தியானந்தாவுடன் பேட்டியும் நடத்தியுள்ளார். இவை சமூக ஊடகங்களில் பெரும் விவாதங்களை கிளப்பின. இது மட்டுமல்லாமல், தாது மணல் கொள்ளை குறித்து வெளியிட்ட வீடியோவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவர் வெளியிட்ட இந்த வீடியோ காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு எதிராக தொடர் விமர்சனங்களும், அரசியல் நெருக்கடிகளும் உருவானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள் இது குறித்து கேட்டதற்கு சாட்டை துரைமுருகன் நடத்தும் சேனலுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சீமான் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் சீமான் இந்த கருத்தை தெரிவித்த பின்னர் சாட்டை துரைமுருகன் தனது ஊடக பக்கத்தில் உள்ள பயோவில் நாதக கொள்கை பரப்புச் செயலாளர் என்று இருப்பதை நீக்கி விட்டு யூடூபர் கன்டென்ட் கிரியேட்டர் என மாற்றியுள்ளார். இந்த மாற்றமானது அவரது அரசியல் செயல்பாடுகளில் மாற்றத்தை உணர்த்துகிறதா? அதாவது விமர்சனம் வந்ததும் கட்சி தலைவர் தனக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்காமல் சம்பந்தமில்லை என கை விரித்ததால் கட்சியிலிருந்து விளக்க போகிறாரா? என்ற கோணத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.