இன்று நாம் பின்பற்றும் வாழ்க்கைமுறை முற்றிலும் ஆரோக்கியமற்ற ஒன்றாக இருக்கிறது.காலையில் எழுவது முதல் இரவு உறங்குவது வரை நாம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்களை தான் அதிகம் செய்து வருகின்றோம்.
நாம் வாழும் இந்த ஆரோக்கியமில்லாத வாழ்க்கைமுறையால் இளம் வயதிலேயே பல வியாதிகளை சந்திக்க நேரிடுகிறது.கடந்த 20,30 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பு பாதிப்பு குறைவாக இருந்தது.ஆனால் தற்பொழுது சிறு குழந்தைகளும் மாரடைப்பு ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது.
மாரடைப்பு ஏற்பட மிக முக்கிய காரணம் நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கம்.மைதா,பிராய்லர்,பதப்படுத்தப்பட்ட உணவுகள்,எண்ணையில் பொரித்த உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளால் இளம் வயதினர் மாரடைப்பிற்கு இரையாகுவது தொடர்கதையாகி வருகிறது.
முன்பெல்லாம் ஓடி ஓடி உழைத்த மக்கள் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஒரே இடத்தில் அமர்ந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நிலைக்கு மாறிவிட்டனர்.இது ஒருபுறம் மகிழ்ச்கியை கொடுத்தாலும் மறுபுறம் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்திவிடும் என்பதே நிதர்சனம்.உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறை நம் உடல் உழைப்பிற்கு முற்றிலும் தடையாக இருக்கிறது.
உடல் உழைப்பு இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது.குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிய காலம் மாறி நாள் முழுவதும் செல்போனிற்கு அடிமையாகி வருகின்றனர்.உடல் உழைப்பு இல்லாமல் சௌகரிய சூழலை விரும்புவதால் உடலில் பல நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.
எனவே குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் ஆரோக்கியமான உணவுமுறையை கடைபிடிக்க வேண்டும்.ஜங்க் புட்,துரித உணவுகள்,ஹோட்டல் உணவுகளை முற்றிலும் தவிர்த்து முளைகட்டிய தானியங்கள்,உலர் விதைகள் போன்ற ஆரோக்கியமான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.தினமும் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும்.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.