திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை மக்கள் சாமி கும்பிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழகத்தில் ஆறுபடை வீடுகள் உள்ளது. இதில் 2-வது படைவீடாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும் ஒன்று.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க திருச்செந்தூர் வருவது வழக்கம். இந்த சூழ்நிலையில் அங்கு கும்பலை கட்டுப்படுத்த கட்டண கொள்ளை நடைபெறுவதாக மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவிற்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். எப்பொழுதும் சாதாரண நாட்களில் கோவிலில் இலவச தரிசனம் வசதியும் விரைவு தரிசனத்திற்கு ஒரு நபருக்கு ரூ.100 ரூபாயும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அதுபோல விசேஷ நாட்கள் என்றால் ரூ.200 என விரைவு தரிசன கட்டணம் இரட்டிப்பாக வசூல் செய்யப்படுகிறது. சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழாவின் போது விரைவு தரிசன கட்டணம் நபர் ஒருவருக்கு ரூபாய்.1000 என நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்டது. இதனால் சில பக்தர்கள் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதானார்கள். இதனை அடுத்து கோவில் நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந்த சூழ்நிலையில் கந்த சஷ்டி விழா விரைவில் தொடங்க உள்ளது. இதனால் ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு கோவில் நிர்வாகம் விரைவு தரிசன கட்டணத்தை ஒரு நபருக்கு ரூ 1000 என நிர்ணயம் செய்துள்ளது. இதுபோல கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் வசூல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதன் காரணமாக கந்த சஷ்டி விரதம் இருந்து கடவுளை தரிசனம் செய்ய வரும் ஏழை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும்.
எனவே விழாவின்போது கோவில் நிர்வாகத்தின் கூடுதல் கட்டண வசூல் முறைக்கு தடை விதிக்க வேண்டும். அதற்கு பதிலாக ஆதார் எண் அடிப்படையில் இணையதளம் வழியாக முன்கூட்டியே டோக்கன் வழங்கும் முறையை ஏற்படுத்தி இதற்காக சிறப்பு மையங்கள் உண்டாக்கி ஏழை மக்களும் உரிய முறையில் தரிசனம் பெறுவதற்கு வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. கோவில்களில் தரிசனம் செய்வதற்கு 1000, 2000 என கட்டண வசூலித்தால் ஏழைகள் எவ்வாறு சுவாமியை தரிசனம் செய்வார்கள்?? அவர்களால் இந்த தொகையை செலுத்த இயலுமா?? இது தொடர்ந்தால் ஏழைகள் சுவாமி தரிசனம் செய்ய இயலாத நிலை ஏற்படும். கோவில்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று. பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோவிலா?? ஏன் ஏழைகள் சுவாமி தரிசனம் செய்ய கூடாதா?? என நீதிபதிகள் கோவில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து எந்த சமய அறநிலைத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய முறையில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
புகழ்பெற்ற கோவிலில் கட்டண உயர்வு தொடர்பான புகார் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.