ஈரோடு மாவட்டத்தின் பிரதான தொழிலாளாக ஜவுளி உற்பத்தி இருக்கிறது. இதை நம்பி இங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் சமீபகாலமாக நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நூல் விலையால் ஜவுளி தொழிலை நம்பியுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
கடந்த பல மாதங்களாகவே உற்பத்தி செய்யப்படும் பஞ்சு விலை அதிகபட்சமாக 10% உயரவில்லை. ஆனால், நூல் விலையானது 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அதுவும் நாளுக்கு நாள் கிடுகிடுவென் விலை உயர்கிறது. நூல் விலைக்கு ஏற்ப துணி விலையை உடனே உயர்த்தி விற்க முடியுமா? ஈரோடு மாவட்ட ஜவுளி மற்றும் துணி வியாபாரிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே நூல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த 3 மாதங்களில் நூல் விலை 40 முதல் 50% வரை உயர்ந்துள்ளதாக வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ரூ.50 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நூல் விலை உயர்வைக் கண்டித்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த ஜனவரி மாதம் ஒரு வார கால வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.