பாஜகவுக்கு தாவிய கமல் கட்சியின் மூன்று பிரபலங்கள்!
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும் என்று பொதுமக்கள் மற்றும் படித்த மாணவர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல அக்கட்சிக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பும் கிடைத்தது
கமல் பிரச்சாரத்துக்கு சென்ற இடமெல்லாம் இளைஞர்களின் கூட்டம் அதிக அளவில் கூடியதால் அக்கட்சிக்கு புதிய வாக்காளர்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல் கட்சி கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் ஒரு சில தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்று டெபாசிட் இழந்தனர்
கமலுக்கு சென்ற இடமெல்லாம் கூடிய கூட்டம் வாக்குகளாக மாறவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் தனது கட்சியின் நிர்வாகிகளை மாற்றி கட்சிக்கு புத்துயிர் கொடுக்க முயற்சி செய்து வருகிறார்
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கமல் கட்சியில் இருந்து மூன்று பிரபலங்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் சார்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கிருஷ்ணகிரி காருண்யா, சிதம்பரம் ரவி மற்றும் அரக்கோணம் ராஜேந்திரன் ஆகியோர் சற்று முன்னர் பாஜகவின் முன்னணி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதனை அடுத்து கமல் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது