தமிழகத்தில் முதன்முதலாக தாக்கல் செய்யப்படும் இ பட்ஜெட்! தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

Photo of author

By Sakthi

தமிழக சட்டசபையில் சென்ற 2018 ஆம் வருடத்தில் காகிதம் இல்லாத சட்டசபை என்று திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சென்ற பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் காகித வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திராவிடர் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டசபையில் காகிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த தீர்மானம் செய்யப்பட்டது. அந்த விதத்தில் முதல் பட்ஜெட் இன்றையதினம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதுவும் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணி அளவில் தாக்கல் செய்ய இருக்கின்றார். அவர் சுமார் 1 30 மணி நேரம் பட்ஜெட்டை வாசிப்பார் என்று சொல்லப்படுகிறது. அவர் வாசிக்கும் வாசகங்கள் சட்டசபை உறுப்பினர்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கணினி திரையில் வார்த்தைகளாக வரும். அதை தவிர டேப்லட் என்ற கருவியும் சட்ட சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் பட்ஜெட் தொகுப்பை காணலாம் என்று சொல்லப்படுகிறது.

நோய்தொற்று நீடித்து வருவதன் காரணமாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது மாடியில் சட்டசபை கூட்டங்கள் தற்சமயம் நடந்து வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரும் அந்த அரங்கத்தில் இன்று ஆரம்பித்து செப்டம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. அரசுத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் நடைபெற இருக்கிறது.

சமீபத்தில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இதற்கு முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகள் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ஆட்சியை பற்றி பல விமர்சனங்களை செய்தால் அதனை அடுத்து முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு மற்றும் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்தது. அவர்மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது அதோடு முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சட்டசபையில் கடுமையான விவாதங்கள் நடைபெறலாம் வெளிநடப்பு வெளியேற்றம் என்று பல சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சட்டசபை எப்போதும் பரபரப்பாக நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.