அனைத்து கட்சி சட்டசபை உறுப்பினர்களுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

அனைத்து கட்சி சட்டசபை உறுப்பினர்களுக்கு முக்கிய கோரிக்கையை வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Sakthi

சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியது ஆனால் இந்த நோய்த்தொற்று இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே சர்வதேச நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் போன்றவற்றை மத்திய அரசு நேரடியாக இந்தியா வருவதற்கு தடை விதித்தது. அதாவது சீனா போன்ற இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கிளம்பும் விமானங்கள் நேரடியாக அல்லது அந்த நாடுகளுக்குச் சென்று விட்டு அதன்பின்பு இந்தியா வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டன.

இப்படி இந்தியாவிற்கு கொரோனா நோய்த்தொற்று வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனாலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த நோய் தொற்று இந்தியாவிற்கு வந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால் பொதுமக்கள் தொழில் நிறுவனங்கள் வியாபாரிகள் ஏழை நடுத்தர மக்கள் எல்லோரும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளானார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை பல தொண்டு நிறுவனங்கள் செய்து வந்தன. மத்திய மாநில அரசுகளும் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், அந்த சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்கு உதவி செய்யும் விதமாக ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை அமல்படுத்தியது. தற்சமயம் திராவிடர் முன்னேற்றக் கழகம் ஆளும் கட்சியாக இருக்கிறது இந்த சமயத்தில் மீண்டும் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை அந்த கட்சியை கையிலெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பு ஒன்றில் திமுக சார்பாக ஒன்றிணைவோம் என்ற திட்டத்தை மறுபடியும் நாம் ஆரம்பிக்கலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நம்முடைய கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவை பிறப்பிக்கின்றேன். இது போன்ற பேரிடர் சமயத்தில் நாட்டு மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்து தருவது அவசியம். நம்முடைய ஆட்சி காலத்தில் நடவடிக்கையுடன் நம்முடைய கட்சியினரும் மக்களுக்காக உதவிகளை செய்திட வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

நம் மீது நம்பிக்கை வைத்து நமக்கு வாக்களித்து அரியணையில் அமர வைத்து இருக்கும் பொது மக்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கான காலகட்டம் தான் இது என்று தெரிவித்த அவர், இதைப் போன்று எல்லா கட்சி சார்ந்த சட்டசபை உறுப்பினர்களும் மக்களுக்கான பணியை எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று நான் எல்லோருக்கும் கோரிக்கை வைக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.