திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன?
தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியானது.
அதன்பின்னர், ஆலோசனையில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து விவாதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மே 1 ஆம் தேதி மூன்றாம் கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தொடங்க உள்ளது.
அதுகுறித்தும் விவாதித்தாகவும், தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்திற்கு ஒன்றரை கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள குறிப்பிடத்தக்கது.