உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பாரத பிரதமர் மோடி யாரும் வெளியில் வரவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார்.
இந்த அதிரடி உத்தரவால் காவல்துறை வெளியில் வருபவர்களிடம் கண்டிப்பு காட்டி வந்தது, இதனால் நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று தமிழக முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையில் வெளியூர்களில் வெளி மாநிலங்களில் வேலை செய்துவரும் கூலித் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே சிக்கித்தவித்தனர். இவ்வாறு நாமக்கல் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் என்ற வாலிபர், ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிராவில் சிக்கி தவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் லோகேஷ் மகாராஷ்டிராவிலேயே தங்கியிருந்தார், அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டை காலி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டு நடந்தே வீட்டுக்கு வர முடிவு செய்தார்.
லோகேஷ் நடந்து வரும்போது சில லாரி ஓட்டுநர்களின் உதவியோடு கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர்களை கடந்துள்ளார். வரும் வழியில் ஆந்திராவில் உள்ள முகாம் ஒன்றில் இரவு தங்கி உள்ளார், அங்கு அவர் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லோக்கேஷன் பரிசோதனை செய்த டாக்டர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊரான நாமக்கல் அருகில் உள்ள பள்ளிபாளையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.