தற்பொழுது தை மாத பனி காலம் தொடங்கிவிட்டது.இந்த பனி காலத்தில் உடம்பு கதகதப்பாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.உடலை கதகதப்பாக்க வைத்துக் கொள்ள கம்பு உதவும்.இதில் தையமின்,நியாசின்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த கம்பில் சூப் செய்து குடித்தால் உடல் குளிர்ச்சியடைவது கட்டுப்படும்.
குளிர் காலத்தில் கம்பு உணவு எடுத்துக் கொண்டால் உடலில் நோய் தொற்று ஏற்படுவது கட்டுப்படும்.கம்பு உட்கொண்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.இதனால் சளி,இருமல்,ஜுரம் போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்வது சுலபமாகிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)கம்பு – கால் கப்
2)கேரட் – ஒன்று
3)பீன்ஸ் – இரண்டு
4)மீல் மேக்கர் – 10 கிராம்
5)இஞ்சி – ஒரு துண்டு
6)பூண்டு பல் – நான்கு
7)வெங்காயத் தாள் – சிறிதளவு
8)உப்பு – தேவையான அளவு
9)மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
10)சீரகத் தூள் – 1/4 தேக்கரண்டி
11)சோள மாவு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் கம்பை 8 மணி நேரம் ஊறப்போட்டு பிறகு வெயிலில் காயவைக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து கேரட்,பீன்ஸ்,வெங்காயத் தாள்,இஞ்சி மற்றும் பூண்டு பற்களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து கம்பு பொடியை அதில் கொட்டி கலந்து விட வேண்டும்.தண்ணீர் தேவைபட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
இதன் பிறகு மிளகுத் தூள்,சீரகத் தூள்,உப்பு சேர்த்து கலந்துவிட வேண்டும்.விருப்பப்பட்டால் சூப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.சூப் நன்கு கொதித்து வந்ததும் ஒரு தேக்கரண்டி சோள மாவை கரைத்து அதில் ஊற்றி இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பு சிறிது கொத்தமல்லி தழையை நறுக்கி போட்டுக் கொள்ள வேண்டும்.இந்த சூப்பை குடித்தால் குளிர்காலத்தில் உடல் கதகதப்பாக இருக்கும்.