தற்பொழுது பின்பற்றப்படும் உணவு பழக்கங்களால் உடல் எடை எளிதில் கூடிவிடுகிறது.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் நோய்வாய்ப்பட வேண்டி இருக்கும்.எனவே உடலில் உள்ள கொலஸ்ட்ராலை அளவை குறைத்து சீராக உடல் எடையை பராமரிக்க கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள்.
அரிசி ரகங்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை கருப்பு கவுனி.இந்த அரிசியை உணவாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
தேவைப்படும் பொருட்கள்:
*கால் கப் கருப்பு கவுனி
*சிட்டிகை அளவு உப்பு
*ஒரு கப் தேங்காய் பால்
*அரை கப் நாட்டு சர்க்கரை
*ஒரு ஏலக்காய்
செய்முறை விளக்கம்:
முதலில் கால் கப் அதாவது 250 கிராம் கருப்பு கவுனி அரிசியை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு ஊறவிடுங்கள்.
பிறகு தண்ணீரை வடித்துவிட்டு கருப்பு கவுனி அரிசியை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு பாத்திரம் ஒன்றில் கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பிறகு அரைத்து வைத்துள்ள கருப்பு கவுனி அரிசியை அதில் கொட்டி நன்றாக கலந்து விடுங்கள்.
பிறகு அரை மூடி தேங்காயை நன்றாக துருவி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள்.இதை வெந்து கொண்டிருக்கும் கருப்பு கவுனி கஞ்சியில் ஊற்றி கலந்துவிடுங்கள்.
அடுத்து அரை கப் அளவிற்கு நாட்டு சர்க்கரையை அதில் கொட்டி கிண்டவும்.அதன் பிறகு சிட்டிகை அளவு உப்பு மற்றும் ஒரு ஏலக்காயை இடித்து போட்டு கொதிக்க வைத்தால் சுவையான கஞ்சி ரெடி.இந்த கருப்பு கவுனி கஞ்சி உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.