தீபாவளி கூடுதல் தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை.!!

Photo of author

By Vijay

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும், தளர்வுகளுடன் கூடிய ஒரு ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

மேலும், வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பதா.? அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா.? என்பது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் புதுத் துணிகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க அதிக ஆர்வம் காட்டி ஒரே இடத்தில் அதிகமாக கூடுவார்கள். இதனால் ஜவுளி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் வேகமாக பரவ வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, வணிக நிறுவனங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், ஊழியர்கள் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இன்று நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள், தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.