இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!!

0
382

இன்று.. ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்.. கஷ்டங்கள் விலக தெய்வங்களை வழிபடுங்கள்..!!

செவ்வாய்க்கிழமை என்பது நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும்.

செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்கியமும் மற்றும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி மாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாளாகும்.

பெண்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் ஒளவையார் விரதம் இருப்பார்கள். இவ்விரதத்தின்போது இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒரு வீட்டில் சேர்ந்து ஒன்று கூடுவார்கள். மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் ஒளவையார் விரதத்தை தொடங்குவார்கள்.

இவ்விரதத்தின் அடிப்படையில் பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொலுக்கட்டை தயாரிப்பார்கள். அன்றைய நாள் செய்யும் உணவுகள் எதிலும் உப்பு சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். அதன்பின் ஒளவையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை கேட்பார்கள். இறுதியாக பெண்களே விரத உணவுகளை அனைத்தையும் உண்பார்கள். இவ்விரதத்தில் ஆண்களை கலந்து கொள்ள கூடாது.

குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கணவன் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

பெண்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகின்றனர்.

செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கள கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும், அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

ஆடி செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது.
செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைபட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் கடைபிடிப்பதும் நல்லது.

Previous articleதினசரி நாம் அனைவரும் செய்யும் தவறுகள்! இந்த எட்டு வழிமுறைகளை செய்தால் மட்டும் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!
Next articleதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! ஊதியம் ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை !