இன்று நடைபெறும் 14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரியா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதில் லீக் போட்டிகள், குவாலிபயர் 1 எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியுடன் ஐபிஎல் 14 வது சீசன் நிறைவடைகிறது.
இன்று 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் 3 கோப்பைகளை ( 2010 2011 2018) வென்றுள்ளது. அதேபோல் கொல்கத்தா அணியும் இதுவரை ஐபிஎல் தொடரில் இரண்டு (2012, 2014)கோப்பைகளை வென்றுள்ளது. இந்த இரு சாம்பியன் அணிகளும் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல மோதுவதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நேருக்கு நேர்,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில், அதில் சென்னை அணி 16 போட்டிகளிலும் கொல்கத்தா அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு போட்டி முடிவில்லை.